புதிய ஜவுளிக் கொள்கை 2019

தமிழக அரசின்  சார்பில்  புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை – 2019 வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள நூற்பாலைகளில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய இயந்திரங்களின் தொழில்நுட்ப மேம்பாடு, நவீனப்படுத்தலுக்கான முதலீடுகளின் மீது 2 சதவீத வட்டி மானியம், தொடக்க கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கான வட்டி மானியம் 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தி வழங்குதல், கைத்தறி ரகங்களுக்கான தள்ளுபடி மானியத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை ஆண்டுக்கு ரூ.80 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்த்தி வழங்குதல் ஆகிய சலுகைகள் இந்த ஜவுளிக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புத்தம் புதிய நாடா இல்லா விசைத்தறி வாங்குதலில் செய்யப்படும் முதலீடுகளின் மீது மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்துடன், மாநில அரசால் கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். தறி ஒன்றுக்கு ரூ.4 லட்சத்துக்கு மிகாமல் மூலதன மானியம் வழங்கப்படும். நெசவுக்கு தயார் செய்யும் பாவு நீட்டுதல் மற்றும் கஞ்சி தோய்த்தலில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மத்திய அரசின் 10 சதவீதம் மானியத்துடன் மாநில அரசால் கூடுதலாக 10 சதவீதம் ஒரு அலகுக்கு ரூ.30 லட்சத்துக்கு மிகாமல் மூலதன மானியம் வழங்கப்படும்.

ஜவுளித் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், புதிய கொள்கை வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஜவுளித் தொழிலில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதுடன், பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும் என்றும் ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஒவ்வொரு பூங்காவுக்கும் 50 சதவீத மானியம் அல்லது ரூ. 2.50 கோடி நிதியுதவி, முத்திரை வரியில் இருந்து விலக்கு, 9 சதவீத மூலதன மானியம், 6 சதவீத வட்டி மானியம் போன்ற  சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக 5 சதவீத மூலதன மானியம், தொழிலாளர்களுக்கு விடுதிகள் கட்ட ரூ.1.50 கோடி உதவி, தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டுக்கு ரூ. 5 கோடி உதவி போன்ற திட்டங்கள் ஆகியன  அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!